தற்கொலை 'பாயின்ட்'டாக மாறும் பள்ளிப்பாளையம் காவிரி பாலம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் காவிரியாற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு வசதியை அதிகப்படுத்த வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் - ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டம் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும், 4 அடி உயரத்திற்கு பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டாக இந்த பாலத்தில் இருந்து, காவிரி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை, 7க்கும் மேற்பட்டோர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த பாலத்தின் பாதுகாப்பு சுவர் உயரம் மிகவும் குறைவாக உள்ளதால், எட்டிப்பார்த்தால் கூட நிலை தடுமாறி கீழே விழுந்து உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பாலத்தின் பாதுகாப்பு சுவரில் சாய்ந்து, 'செல்பி' எடுப்பதும் அதிகரித்து வருகிறது. இதனால் விபரீதம் அதிகரிக்கும் முன், பாதுகாப்பு சுவரில் வேலி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.