காங்., ஆபீஸ் திறப்புக்கு அழைப்பின்றி பரமேஸ்வர் அதிருப்தி!: மூத்த தலைவராக இருந்தும் மதிப்பில்லை என வேதனை
பெங்களூரு: டில்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் அலுவலகமான, இந்திரா காந்தி பவன் திறப்பு விழாவில், தனக்கு அழைப்பு விடுக்காத மேலிடத்தின் செயலால், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அதிருப்தி அடைந்துள்ளார். மூத்த தலைவரான தனக்கு மதிப்பில்லையே என, மனம் புழுங்குகிறார்.
காங்., கட்சிக்கு டில்லியில் பிரமாண்டமான புதிய ஐந்து மாடி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, 'இந்திராகாந்தி பவன்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பங்கேற்க உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ஆர்வமாக இருந்தார். பொதுவாக காங்கிரசில் மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாநில தலைவர் மாற்றப்படுவது வழக்கம்.
பல தலைவர்கள் ஐந்து ஆண்டுகள் அப்பதவியில் இருந்துள்ளனர். ஆனால், பரமேஸ்வர் எட்டு ஆண்டுகள் மாநில தலைவராக பதவி வகித்து, சாதனை செய்தவர். 2013ல் மாநில தலைவராக சிறப்பாக பணியாற்றிய இவர், கட்சியை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினார். 2023 சட்டசபை தேர்தலிலும் கட்சியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தவர்.
கட்சியின் மூத்த தலைவர்களில், பரமேஸ்வரும் ஒருவர். எனவே டில்லியில் நடக்கும் இந்திராகாந்தி பவன் திறப்பு விழாவில் பங்கேற்கும்படி, தனக்கும் மேலிடம் அழைப்பு விடுக்கும் என, ஆவலோடு காத்திருந்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. மேலிடமோ முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இது, பரமேஸ்வரை வேதனைப்படுத்தியுள்ளது.
'கட்சியின் மூத்த தலைவராக இருந்தும், தனக்கு கட்சியில் மதிப்பு இல்லையே' என, மனம் வெதும்புகிறார். கட்சி தன்னை புறக்கணிப்பதாக கருதுகிறார். சில நாட்களுக்கு முன், கர்நாடக காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பெங்களூரு வந்திருந்தார். அவர், மற்ற அமைச்சர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தினார். அப்போதும் அமைச்சர் பரமேஸ்வருக்கு அழைப்பு விடுக்காமல் சுர்ஜேவாலா அலட்சியப்படுத்தினார்.
இதனால், பரமேஸ்வர் தர்ம சங்கடத்துக்கு ஆளானார். இது குறித்து ஊடகத்தினர் கேள்வி எழுப்பிய போது, 'துமகூரில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருந்ததால், சுர்ஜேவாலா நடத்திய ஆலோசனை கூட்டத்தில், என்னால் பங்கேற்க முடியவில்லை' என மழுப்பலாக பதில் அளித்திருந்தார்.
இப்போது டில்லியில் நடந்த முக்கியமான நிகழ்ச்சியிலும், இவருக்கு அழைப்பு விடுக்காதது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. முதல்வர் பதவி எதிர்பார்க்கும் அமைச்சர்களில், பரமேஸ்வரும் ஒருவராவார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியில் கண் வைத்துள்ள அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக, 'டின்னர் பார்ட்டி' நடத்துகின்றனர்.
முதலில் பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். இதில் முதல்வர் சித்தராமையா உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் பரமேஸ்வரும், டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்ய திட்டமிட்டார். ஆனால், இதற்கு சுர்ஜேவாலா ஆட்சேபம் தெரிவித்ததால், பார்ட்டியை தள்ளி வைத்தார். இந்திராகாந்தி பவன் திறப்பு விழாவுக்கு, தனக்கும் அழைப்பு வரும். இதை காரணமாக வைத்து டில்லிக்கு சென்று, மேலிட தலைவர்களை சந்தித்து, டின்னர் பார்ட்டிக்கு அனுமதி பெற, பரமேஸ்வர் நினைத்திருந்தார். ஆனால், அவருக்கு அழைப்பு வராததால் ஏமாற்றமடைந்தார்.
சில அமைச்சர்கள், தங்களின் தனிப்பட்ட விருப்பத்தின்படி, டில்லிக்கு சென்றுள்ளனர். மேலிட தலைவர்களை சந்தித்து, முதல்வர் மாற்றம், அமைச்சரவை மாற்றம், மாநில தலைவர் மாற்றம் உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கும் நோக்கில் டில்லிக்கு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக, பரமேஸ்வர் நேற்று அளித்த பேட்டி:
மேலிட தலைவர்களை சந்திக்க, டில்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். இந்திராகாந்தி பவன் திறப்பு விழா நடப்பதால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கட்சியின் பொது செயலர்கள் பணி நெருக்கடியில் இருப்பர். இவர்களை சந்திக்க முடியாது.
எனவே நான் தற்போதைக்கு டில்லிக்கு செல்லவில்லை. வரும் நாட்களில் டில்லி செல்வேன். கட்சி மேலிடத்தின் உத்தரவுப்படி, டின்னர் மீட்டிங் தள்ளி வைக்கப்பட்டதே தவிர, ரத்து செய்யவில்லை. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து, நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம்.
தலித்துகள் முதல்வராக கூடாதா. அவர்களுக்கும் திறமை உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கு, வாய்ப்பு கிடைக்க வேண்டாமா. முதல்வர் பதவி குறித்து, யாரும் பேச கூடாது என, மேலிடம் உத்தரவிட்டதால் நான் குறைவாக பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
***