அனுமதியின்றி இயங்கிய 2 கடைகளுக்கு 'சீல்'; ரூ.24 லட்சம் மதிப்பில் பட்டாசுகள் பறிமுதல்

ஓசூர்: ஓசூரில், அனுமதியின்றி இயங்கிய, 2 பட்டாசு கடைகளுக்கு போலீசார், 'சீல்' வைத்து, 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அனில், கடந்த, 13ல் ரோந்து சென்றபோது, சில இடங்களில் பட்டாசு கடைகள் இயங்கி வந்தது தெரிந்தது. அவை அனுமதி பெற்றுள்ளனவா என விசாரிக்க வருவாய்துறையினருக்கு தகவல் அளித்தார். இதில், தீபாவளிக்கு கடந்த, 2024ல் அக்., 3வது வாரத்தில் தற்காலிக கடைகள் அமைக்க மட்டுமே அனுமதி வழங்கியதும், ஆனால் அனுமதி முடிந்தும் கடைகளை தொடர்ந்து நடத்தியதும் தெரிந்தது.

ஓசூர், பாகலுார் சாலையில் இயங்கும் பட்டாசு கடை மீது டவுன் வி.ஏ.ஓ., (பொ) நடராஜ் புகார்படி, ஓசூர் ஹட்கோ போலீசார், கடையிலிருந்த, 225 கிலோ அளவிலான, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து கடைக்கு, 'சீல்' வைத்தனர். மேலும், கடை உரிமையாளர்களான ஓசூர், திருப்பதி நகரை சேர்ந்த முனிரத்னம், 63, என்ற பெண்ணையும், அவரது மகன் தேஜஸ், 26 ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்தனர்.

அதேபோல, ஆர்.டி.ஓ., செக்போஸ்ட் அருகில், செயல்பட்ட பட்டாசு கடை மீது, நல்லுார் வி.ஏ.ஓ., (பொ) ராஜ்குமார் புகார் படி, நல்லுார் போலீசார், 295 கிலோ அளவில், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து கடைக்கு, 'சீல்' வைத்தனர். கடை உரிமையாளரான ஓசூர் பஸ்தியை சேர்ந்த புஷ்பராஜ், 54 என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement