டிக்டாக் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டிரம்ப் திட்டம்
நியூயார்க்:அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கான தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிபர் (தேர்வு) டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிக்டாக் செயலியில் பதிவாகும் தகவல்கள், சீன அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு, அந்த செயலி மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. நிறுவனத்தை அமெரிக்க உரிமையாளருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து டிக் டாக் உரிமையாளரான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அதிபராக, டிரம்ப் பதவியேற்பதற்கு முதல் நாள், டிக் டாக் மீதான தடை அமலுக்கு வந்துவிடும் நிலை உள்ளது. ஆனால், இந்தத் தடையை அமல் செய்ய டிரம்ப் தரப்புக்கு விருப்பம் இல்லை என்று இப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கு பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு அவகாசம் அளிக்கும் வகையில், தடை அமல் செய்வதை 90 நாட்கள் நிறுத்தி வைக்க டிரம்ப் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், பைட் டான்ஸ் நிறுவனம், டிக் டாக் செயலியை அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நிலைமை கை மீறி போனால், அமெரிக்காவில் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளது.