மலர் கிரீடம், செங்கோல் வைத்து அவ்வையார் சிலைக்கு மரியாதை
வீரபாண்டி: திருவள்ளுவர் தினத்தையொட்டி, சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் முன் உள்ள அவ்வையார் சிலைக்கு, தேசிய சமூக இலக்கிய பேரவை சார்பில், 24ம் ஆண்டாக நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. அதன் மாநில தலைவர் குமரவேல், சிலைக்கு புதுப்புடவை சாற்றி, மலர் கிரீடம் அணிவித்து, தமிழ் செங்கோலை வைத்து மரியாதை செய்தார்.
அதேபோல், சேலம் பா.ஜ., சார்பில், தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் நாக வீரப்பன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் கோபிநாத், கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் வெங்கடாஜலம் உள்ளிட்ட நிர்வாகிகள், அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, பா.ஜ.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் திருக்குறள் இலக்கிய அறக்கட்டளை சார்பில், 15ம் ஆண்டாக நேற்று, தாரமங்கலம் அஞ்சல் நிலையம் அருகே, திருவள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கினர். அறக்கட்டளை தலைவர் அங்கமுத்து, செயலர் இருசப்பன், பொருளாளர் பாலு உள்பட பலர் பங்கேற்றனர்.