கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு; கோவில் நிலங்கள் முழுமையாக மீட்கப்படுமா?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் கனிமவள கொள்ளை நடந்துள்ளதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு பின் கோவில் நிலங்களை மீட்கும் முயற்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலுள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, கனிமவள கொள்ளை அதிகளவில் நடந்தது. இதுகுறித்து, திருதொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்பே, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
ரூ.198 கோடி கனிம வளம்
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 198 கோடி ரூபாய் அளவிற்கு கனிமவள கொள்ளை நடந்திருப்பதாக தெரிவித்தார். கடந்த ஜூலை, 24ல் கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேகுளி பெருமாள் கோவில், பட்டாளம்மன் கோவில் நிலங்களை ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'இக்கோவில்களுக்கு சொந்தமான, 12.67 ஏக்கர் நிலத்தில், 4.16 ஏக்கர் நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை நிச்சயம்' என கூறினார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கோவில் நிலங்கள் எங்கே?
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. ஒவ்வொரு கோவில் முகப்பில் பலகை வைக்கப்பட்டு, கோவில் நிலங்களின் விபரங்கள் வெளியிட வேண்டுமென அறிவிக்கப்பட்டாலும், எந்த கோவில் நிலங்களின் விபரமும் முழுமையாக தெரியவில்லை. இதில், பலர் கோவில் நிலங்களை ஆக்கிரமித்தும், தங்கள் பெயர்களில் பத்திரமும் பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பின்னரே, தற்போது நிலங்களை அளக்கும் பணிகளில் சர்வேயர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அப்பணியும் இன்னும் முடியவில்லை. கோவில் நிர்வாகத்தினருக்கே, தங்கள் கோவில் நிலங்கள் எங்குள்ளது என தெரியாத சூழல் உள்ளது.
அதிகாரிகள் விளக்கம்
ஹிந்து சமய அறநிலையத்துறையின், கிருஷ்ணகிரி மண்டல உதவி கமிஷனர் அலுவலகம் கடந்த, 2021, பிப்., 11ல் தான் துவங்கப்பட்டது. மாவட்டத்தில் தற்போது வரை, 1,381 கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், 1,041 கோவில்களுக்கு சொந்தமாக, 7,045.05 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 4025.75 ஏக்கர் நிலம் மட்டுமே அளவீடு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பிலுள்ள, 2,269.47 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, புதிதாக ஏலம் விடப்பட்டதாக ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினாலும், முழுமையாக நிலங்களை மீட்க முடியாதது, ஏன் என புரியவில்லை.
சில கோவில் நிலங்களில் மட்டும், 200 கோடி ரூபாய் மதிப்பில் கனிமவள கொள்ளை நடந்திருப்பதாக கூறும் நிலையில், மொத்தமுள்ள கோவில் நிலங்களில், கனிமவள கொள்ளை நடந்துள்ளதா என்பதும், முழுமையான நில அளவீடுக்கு பின்னரே தெரியும்.
கோவிலுக்கு சொந்தமான முழுமையான நிலங்களை மீட்டு, அதை இணையத்திலும், கோவில் பலகைகளிலும் வெளியிட வேண்டும். அவற்றை முறையாக ஏலம் விட்டு, அதில் வரும் வருவாயில் புராதன கோவில்களை புனரமைக்க வேண்டும். பிரச்னைக்குரிய நிலங்களை மீட்க, மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்க வேண்டும். அப்போதுதான் கோவில் நிலங்களை முழுமையாக மீட்க முடியும்.