179 பேரை பலி கொண்ட தென்கொரிய விமான விபத்துக்கு பறவை மோதியதே காரணம்!
முவான்: கடந்த மாதம் இறுதியில் தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு பறவை மோதியதே காரணம் என்று உறுதி செய்யும் வகையில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கடந்த டிச., 29ம் தேதி பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 181 பேரை ஏற்றிக் கொண்டு, தென்கொரியா புறப்பட்ட விமானம், முவான் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றியதில், அதில் பயணித்த 179 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 விமானிகள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
விமான விபத்திற்கு ஜெஜீ ஏர் விமானம் மன்னிப்பு கேட்டுள்ளது. 'துயரத்திற்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களால் முடிந்த உதவிகளையும் செய்வோம்' என விமான நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. இதனிடையே, விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கு காரணம் பறவையாக இருக்குமோ என்ற சந்தேகம் விமான நிலைய அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே இருந்தது.
காரணம், விபத்து நடப்பதற்கு 4 நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தின் இன்ஜின் பகுதியில் பறவை ஒன்று மோதியதாகவும், இதனால், அவசரகால எச்சரிக்கையை விமானிகள் கொடுத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதை உறுதி செய்யும் விதமாக, விபத்துக்குள்ளான விமானத்தின் இன்ஜினில் பறவையின் இறகு மற்றும் ரத்தக்கறை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.