எச். ராஜா பெயரில் இணையத்தில் போலி கடிதம்! அவதூறு பரப்பியவர்கள் மீது போலீசில் பா.ஜ., புகார்

சென்னை; தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா பெயரில் உலா வரும் போலி கடிதத்தை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜ.,வினர் புகார் அளித்துள்ளனர்.



சமூக வலைதளங்களில் நேற்று முதல் ஒரு கடிதம் உலா வர ஆரம்பித்தது. அந்த கடிதம் தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா பெயரில் எழுதப்பட்டு, தேசிய தலைவர் ஜெ,பி. நட்டாவுக்கு அனுப்பப்பட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டது. அந்த கடிதத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பற்றி அவதூறு கருத்துகளை எச்.ராஜா கூறியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த கடிதம் முற்றிலும் போலி, திட்டமிட்டு பரப்பப்படுவதாக எச். ராஜா தெளிவுபடுத்தி இருந்தார். சமூக விரோதிகள் தவறான தகவல்கள் பரப்புவதாகவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார். தமிழக பா.ஜ., சார்பிலும், 'இது போலியானது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆனாலும், அந்த கடிதம் தொடர்ந்து உலா வரவே, தமிழக பா.ஜ.,வின் முக்கிய நிர்வாகிகள் காவல்துறையை அணுகினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலி கடிதம் குறித்தும், அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் மனுவை அளித்தனர்.


மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

Advertisement