முடிவுக்கு வருகிறது காசா போர்: ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!
டெல் அவிவ்: பிணைக்கைதிகள் விடுவிப்பு, காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023ம் அக்.,7 ல் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 1,200 பேர் இறந்த நிலையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்க களத்தில் இஸ்ரேல் இறங்கியது. இதனால், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையிலானபோர் 15 மாதங்களாக நீடித்து வந்தது. 46 ஆயிரம் பேர் இறந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்ட வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வந்தன.
இதன் பலனாக காசாவில் நீடித்து வந்த போரை நிறுத்துவதற்காக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஜன.,15 ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் ஆறு வார காலம் போரை நிறுத்துவது, பிணைக்கைதிகளை பரிமாறிக் கொள்வது அடங்கும்.
இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்புக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நோக்கங்களை கருத்தில் கொண்டும், போருக்கான காரணம் நிறைவேறியதாலும், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் அரசின் முழு அமைச்சரவை நாளை கூடி இறுதி முடிவெடுக்க உள்ளது.