நல்லா நட ராஜா... ஒரு 'டாக் வாக்கரின்' கதை!
''அழுகை, சிரிப்பு, வெறுமை, தனிமை என, எல்லா உணர்வுகளையும் பிரதிபலிக்க கிடைத்த ஓர் கண்ணாடி என்றால், அவை செல்லப்பிராணிகள் தான். பப்பிகளை கொஞ்சுவதும், அதனோடு வாக்கிங் சென்று நேரம் செலவிடுவதும், ஒரு வேலை என்றால், அது எவ்வளவு இனிமையாக இருக்குமென்பதை அனுபவித்தால் தான் புரியும்,'' என புன்னகையோடு துவங்கினார், 'டாக் வாக்கர்' ஷாலினி ரமேஷ்.
சென்னை, 'ஓ.எம்.ஆர்.,' பகுதியை சேர்ந்த, எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், 'டெய்ல்ஸ் அண்டு டிரஸ்ட்' (Tails n Trust) நிறுவனம் மூலம், பப்பிகளை, காலை, மாலை நேரங்களில் வாக்கிங் அழைத்து செல்கிறார். தன் அனுபவம் பற்றி, 'செல்லமே' பக்கத்திற்காக பகிர்ந்தவை:
நான், தனியார் நிறுவனத்தில், புராஜெக்ட் மேலாளராக பணியாற்றினேன். சம்பளம் தாண்டி, மனதுக்கு பிடித்த வேலை செய்ய வேண்டுமென முடிவெடுத்து தான், 'பப்பி போர்டிங்' துவங்கினேன்.
என் வீட்டில், பறவைகள், முயல், கினியாபிக், பப்பி உள்ளது. செல்லப்பிராணிகளுடன் வளர்ந்ததால், அதை எப்படி பார்த்து கொள்ள வேண்டுமென்ற அனுபவம் உள்ளது. இதனால், இத்துறைக்குள் தயங்காமல் காலடி எடுத்து வைத்தேன்.
நண்பர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் சிலர், பப்பியை வாங்கி பெற்றோரிடம் பராமரிப்பு பணிகளை ஒப்படைத்துவிட்டு, படிக்கவோ, வேலைக்கோ வெளியூர் செல்வதால், ஏற்படும் சிரமங்கள் தெரியவந்தது. வயதானவர்களால், பப்பியை வாக்கிங் அழைத்து செல்ல முடிவதில்லை.
கொரோனா சமயத்தில், பப்பி வாங்கிய பலர், தற்போது முழுநேரமாக அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால், பப்பியை வாக்கிங் அழைத்து செல்ல சிரமப்படுகின்றனர்.
பெரிய வகை நாய்களுக்கு, பயிற்சி அளிக்காமல் கட்டி வைத்திருந்தால், அது அக்ரசிவ்வாக மாறலாம். உடல் பருமன் அதிகரிக்கும். 'ஒன் அண்டு டூ'பயிற்சி கொடுக்க, வாக்கிங் அழைத்து செல்வதே பெஸ்ட். இதனால், எங்கே சிக்கல் இருக்கிறதோ அதற்கு தீர்வாக அமையும் வேலையை தேர்வு செய்ய வேண்டுமென கருதி, 'டாக் வாக்கர்' ஆக முடிவெடுத்தேன்.
சிலர், குறிப்பிட்ட நாட்கள் மட்டும் அல்லது வெளியூர் செல்லும் போது, இரவுப்பணி சமயத்தில் அல்லது ரெகுலராக வாக்கிங் அழைத்து செல்ல அணுகுவர். முதலில் பப்பியின் பெயரை தெரிந்து கொள்வேன். முதல்நாள் மட்டும், ஓனருடன் சென்று வாக்கிங் செல்லும் வழி, இடர்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வேன். அடுத்தநாளில் இருந்து, 'லீஸ்' பிடித்தால், பப்பி என் பேச்சு கேட்க ஆரம்பித்துவிடும். சில சமயங்களில் புது சூழலை பார்க்கும் போது, பப்பி அதீத ஆர்வமாக, துள்ளுவது, ஓட முற்படுவது, பாய்வது போன்ற செயல்களில் ஈடுபடும். நாம் கையாளும் அணுகுமுறையில், அதை கட்டுப்படுத்த முடியும்.
ஓரிரு நாட்களில், நான் பப்பியுடன் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வதால் நண்பர்களாகிவிடுவோம். பின்பு எத்தனை நாட்கள் கழித்து பார்த்தாலும், அது வெளிப்படுத்தும் அன்பில் குறைவே இருக்காது.
பப்பியை நன்றாக கையாள தெரிந்தவர்கள், அதனுடன் எளிதில் பழகுவோர், இத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கலாம். 'எந்தன் மனம் பார்க்க,சொல்வதெல்லாம் கேட்க, கிடைத்த ஓர் உயிர்துணை நீயே...' என, முணுமுணுத்து கொண்டே, ரிலாக்ஸாக காலை, மாலையில், பப்பியுடன் வாக்கிங் செல்வது, ஒரு சுகமான அனுபவமே.