'கேட் ப்ளூ' அலட்சியம் வேண்டாம்
பூனை மிகவும் சென்சிட்டிவ்வான விலங்கு என்பதால், தட்பவெப்பநிலை மாறும் போது, அதன் உடல்நிலையில், மாற்றங்கள் ஏற்படலாம். பொதுவாக, பூனைக்குட்டி பிறந்து, 60 நாளில், 'சி.ஆர்.பி.,' எனும் தடுப்பூசி, மூன்று நோய்களுக்கு எதிர்ப்பு ஆற்றல் உருவாக்க செலுத்தப்படும். 90 வது நாளில், ரேபிஸ் தடுப்பூசி மற்றும் 'சி.ஆர்.பி'க்கான முதல் பூஸ்டர் தடுப்பூசியும், 120 வது நாளில், இரண்டாவது பூஸ்டர் ஊசியும் செலுத்தப்படும். இந்த தடுப்பூசியை செலுத்தாமல் தவிர்த்தால், குளிர்காலத்தில் எளிதில், நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடலாம்.
குளிர் மற்றும் மழைக்காலங்கள் துவங்கும் போது பூனைக்கு, 'ப்ளூ', 'பெலைன் பார்வோ' நோய் அதிகம் பரவும். பூனையின் சராசரி உடல் வெப்பநிலையை (38.3- 39.2 டிகிரி செல்சியஸ்) விட, குறைந்தாலோ, அதிகமானாலோ, உடனே கால்நடை மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
உடல் வெப்பநிலை குறையும் போது, போர்வையால் மூடி கதகதப்பை ஏற்படுத்துதல், உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஏ.சி., அறையில் சிறிது நேரம் வைத்தல் போன்ற முதலுதவிகளை, வீட்டிலேயே செய்யலாம். ஆனால், கால்நடை மருத்துவர் பரிந்துரை இல்லாமல், எந்த மருந்துகளையும் தரக்கூடாது.
மேலும் இக்காலத்தில், அதிக முடி கொண்ட பூனைகளுக்கு முறையாக, குரூமிங் செய்ய வேண்டும். இல்லாவிடில், தோலில் அலர்ஜி ஏற்படலாம். இதன் கூண்டு, விளையாட்டு பொருட்களை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். இச்சமயத்தில் வழக்கத்தை விட பூனை அதிக நேரம் துாங்கும் என்பதால், கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட உணவுகளை தரக்கூடாது. அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகள், சமைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிட கொடுப்பது, பவுலில் அடிக்கடி தண்ணீர் மாற்றுவது, அதன் இடத்தை சுத்தமாக பராமரிப்பது அவசியம்.
- எம்.சிலம்பரசன், கால்நடை மருத்துவர், சென்னை.