நடக்காதென்பார்... நடக்கும்!

''மரபு ரீதியாக, பிறந்ததில் இருந்தோ, அல்லது திடீர் விபத்து, நோய் காரணமாகவோ கால்களின் இயக்கம் நின்று முடங்கிக் கிடக்கும் ஐந்தறிவு ஜீவன்களும், இயல்பு வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்ற உந்துதலில் தான், 'வீல் சேர்' உருவாக்கினேன்,'' என்கிறார், குஜராத்தை சேர்ந்த, 'மின்ட்பவுல் டாக் வீல்சேர் இண்டியா' நிறுவனர் பூமித்.

இவர், 'செல்லமே' பக்கத்திற்காக, நம்மிடம் பகிர்ந்தவை:

நான் சாப்ட்வேர் இன்ஜினியர். கிட்டத்தட்ட, 20 ஆண்டு பணி அனுபவம் இருக்கிறது. இத்துறை வாயிலாக கிடைத்த அனுபவத்தால், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, பிறரின் துணை இல்லாமல் செயல்பட முடியாத, ஐந்தறிவு ஜீவன்களுக்கு வீல் சேர் உருவாக்க வேண்டுமென நினைத்தேன்.

ஏனெனில், விலங்குகளுக்கான வீல் சேர் தயாரிக்கும் நிறுவனங்கள், இந்தியாவில் மிகக்குறைவு. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலும், அதிக விலை நிர்ணயிப்பதால், அதை வாங்க பலரும் முன்வருவதில்லை என்பதை அறிந்தேன். சில ஆய்வுகளுக்கு பின், '3-டி' தொழில்நுட்பத்தின் உதவியால் நான்கு விதமான அளவுகளில், வீல் சேர் டிசைன் உருவாக்கி, வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பித்தேன். அலுமினியம் கொண்டு, இந்த வீல் சேர் உருவாக்குவதால்,எளிதில் உடையாமல் இருப்பதோடு, அதிக எடையும் இருக்காது.

பாதிக்கப்பட்ட பப்பியின் வீடியோ மற்றும் சில அளவுகளை தெரிவித்தால், வீல் சேர் உருவாக்கி அனுப்புவேன். இதில், அளவுகளை மாற்றிக்கொள்ள வசதிகள் இருப்பதால் பப்பி வளர்ந்தாலும் பயன்படுத்தி கொள்ளலாம். பப்பி மட்டுமல்லாமல், மியாவ், முயல், கரடி, ஆடு ஆகியவற்றிற்கும், வீல் சேர் தயாரிக்கிறேன்.

2017 ல் மின்ட்பவுல் டாக் வீல்சேர் இண்டியா (Mintbowl dog wheelchair india)நிறுவனம் துவங்கியதில் இருந்து, தற்போது வரை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, வீல் சேர் தயாரித்துள்ளேன். அத்தனை ஜீவன்களின் இயல்பு வாழ்க்கைக்கும், என் சிறு பங்களிப்பை அளித்திருக்கிறேன் என்ற ஆத்மதிருப்தி உள்ளது.

கிட்டத்தட்ட ஒரு கிலோவில் இருந்து, 100 கிலோ எடை கொண்ட செல்லப்பிராணிகள் வரை, பயன்படுத்தும் வகையில் இரு சக்கரம், நான்கு சக்கரம் பொருத்தப்பட்டு தயாரிப்பதால், தேவையானதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். குறைந்தபட்சம், 1,500 முதல், 9,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை அணிந்து கொண்டு, காலை, மாலையில் பப்பி வாக்கிங் செல்லும் வீடியோக்களை, கஸ்டமர்கள் அனுப்புவர். ஆரோக்கியமாக இருக்கும் பப்பிகளை விட, வீல் சேரில் செல்லும் பப்பிகள், சில சமயங்களில், அதிவேகமாக ஓடும். அப்போது அதன் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

தொடர்புக்கு: info@dogwheelchairsindia.com

Advertisement