போலி ஆவணத்துடன் தங்கிய வங்கதேசத்தினர் 7 பேர் கைது
திருப்பூர்: திருப்பூர் மற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் போலி ஆவணங்களுடன் வங்க தேசத்தைச் சேர்ந்த நபர்கள் ஊடுருவி வருவது அதிகரித்து வருகிறது. நேற்று திருப்பூர் வடக்கு போலீசார் சந்தேகப்படும்படியான சிலரை பிடித்து விசாரித்தனர்.
அதில், திருப்பூர் - பவானி நகர் பகுதியில் ஒரு பனியன் உற்பத்தி நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்த ஏழு பேர் பிடிபட்டனர்.
விசாரணையில், வங்க தேசத்தைச் சேர்ந்த இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி சில மாதம் முன், இங்கு வந்து தொழிலாளர்களாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. இதில், ஷாஜஹான், 22, முக்தர், 50, நுாரவி பிரமானிக், 30, இம்ரான் ஹூசேன், 40, கபீர்ஹூசேன், 35, ரபிகுல் இஸ்லாம், 30 மற்றும் ரபானி மண்டல், 35 ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, ஏழு பேரும் சென்னை - புழல் சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். திருப்பூரில் நடப்பு மாதத்தில் மட்டும் இதுவரை, உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர், 46 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.