சம்பவ் ஸ்மார்ட்போன்! சீனா பேச்சுவார்த்தையில் 'சம்பவம்' செய்த இந்திய ராணுவம்

5

புதுடில்லி; சீனாவுடனான முக்கிய எல்லை பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இந்திய ராணுவ உயரதிகாரிகள் சம்பவ் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திய விவரம் வெளியாகி உள்ளது.



இந்திய ராணுவத்தில் முக்கிய தகவல் பரிமாற்றத்தின் போது எந்த சங்கதியும் கசிந்து விடக்கூடாது என்பதில் அதிக அக்கறையும், கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய அம்சமாக இந்திய ராணுவ உயரதிகாரிகள் சம்பவ் என்ற ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.


அதுபற்றிய விவரம் வருமாறு: கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் சீனாவுடான எல்லை பிரச்னை தொடர்பான பேச்சு நடைபெற்றது. சீனாவுடன் பல்வேறு தருணங்களில் எல்லை பிரச்னைகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.


இந்த பேச்சுவார்த்தையின் போது தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள மிகவும் பாதுகாப்பான வழிமுறையை இந்திய ராணுவத்தினர் கையாண்டுள்ளனர். பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக சம்பவ் (SAMBHAV) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி இருக்கின்றனர்.


எல்லையில் இந்திய ராணுவத்தின் நிலைகள், சீன ராணுவத்தின் நிலைகள், அவற்றின் சாதக பாதகங்கள், பேச்சுவார்த்தையில் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை பரிமாற, இந்த சம்பவ் ஸ்மார்ட்போன்களை புழக்கத்தில் வைத்து இருந்திருக்கின்றனர். இந்திய ராணுவம், தொழில்துறையின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் கிட்டத்தட்ட 30,000 அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளன.


இது குறித்து ராணுவ உயரதிகாரிகள் சிலர் கூறியதாவது; முக்கிய விஷயங்களை கையாளும்போது மொபைல் தொழில்நுட்பம் என்பது அதிகம் ஆபத்து நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. என்ன தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன என்பதை குறுக்கீடு செய்து அறிய முடியும். அதற்கு மாற்றாகவே சம்பவ் ஸ்மார்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன.


சம்பவ் போன்கள், சவாலான சூழ்நிலைகளில் தங்கு தடையின்றி இயங்கும் வகையில் இணைப்பை தருகிறது. எந்த சூழ்நிலையிலும் யாராலும் ஒட்டு கேட்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement