என்னை கொல்ல சதி; 25 நிமிடத்தில் மரணத்தில் இருந்து தப்பித்தேன்: ஷேக் ஹசீனா பகீர்

7


புதுடில்லி: 'வங்கதேசத்தில் என்னை கொல்ல சதி நடந்தது. நான் 25 நிமிடத்தில் மரணத்திலிருந்து தப்பித்தேன்' என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.



நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணவர் அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


கடும் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது.



இந்நிலையில், தற்போது ஷேக் ஹசீனா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் என்னை கொல்ல சதி நடந்தது. நான் 25 நிமிடத்தில் மரணத்திலிருந்து தப்பித்தேன். நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அல்லா விரும்புகிறார். நானும், எனது தங்கையும் 20 முதல் 25 நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்தோம்.



அவர்கள் என்னை எப்படி கொல்ல திட்டமிட்டனர் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இருப்பினும் நான் இன்னும் உயிருடன் இருப்பது அல்லாவின் கருணை தான். நான் எனது தேசம் இல்லாமல் இருக்கிறேன். என் வீடு, உடைமைகள் எல்லாம் எரிக்கப்பட்டுவிட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement