பொலிவியா மாஜி அதிபர் எவோ மாரல்ஸை கைது செய்ய நீதிபதி உத்தரவு

2

லா பஸ்: பொலிவியா முன்னாள் அதிபர் எவோ மாரல்ஸை கைது செய்ய அந்நாட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2006 முதல் 2019 வரை, தென் அமெரிக்கா நாடான பொலிவியாவை ஆட்சி செய்த எவோ மாரல்ஸ், தான் பதவியில் இருந்தபோது ஒரு டீன் ஏஜ் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தது மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்காக விசாரணையில் உள்ளார்.

இந்த விழக்கு விசாரணை நேற்று பொலிவியாவின் தெற்கு நகரமான தரிஜாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. இந்தத் தீர்ப்பை அந்நாட்டு மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மாரல்ஸ், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று வழக்கைத் தலைமை தாங்கும் வழக்கறிஞர் சாண்ட்ரா குட்டியர்ரெஸ் தெரிவித்தார். மாரல்ஸின் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் அவருக்கு உடல்நலப் பிரச்சினை இருப்பதாக வாதிட்டனர்.

நீதிமன்றத்திற்கு வெளியே, பெண்கள் குழு ஒன்று மாரல்ஸ்க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'துஷ்பிரயோகம் செய்பவர், சிறுமிகளைத் தொடக்கூடாது' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி வழக்கில் நீதி கோரினர்.

நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் நீதிபதி நெல்சன் ரோகாபாடோ கூறியதாவது:

பொலிவியாவின் முதல் பழங்குடி அதிபர் எவோ மாரல்ஸ், இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜர் ஆகாமல், தவிர்த்துவிட்டதால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

மேலும் அவரது சொத்துக்களை முடக்கவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளோம் என்றார்.

Advertisement