உலக சாம்பியன் குகேஷ் வெற்றி * நெதர்லாந்து செஸ் தொடரில்...

விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்தில் நடக்கும் செஸ் தொடர் முதல் சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தில் 'டாடா ஸ்டீல்' செஸ் தொடர் கிளாசிக்கல் தொடர் நேற்று துவங்கியது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் 14 வீரர்கள் பங்கேற்கின்றனர். நேற்று முதல் சுற்று நடந்தது. செஸ் உலக சாம்பியன் இந்தியாவின் இளம் வீரர் குகேஷ், நெதர்லாந்தின் அனிஷ் கிரியை சந்தித்தார். குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார்.
போட்டியின் துவக்கத்தில் இருந்து குகேஷ் பின்தங்கினார். அனிஷ் கிரி அடுத்தடுத்து சிறப்பான முறையில் காய்களை நகர்த்தினார். 33வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்ய, தோல்வியை நோக்கிச் சென்றார். மறுபக்கம் 35 வது நகர்த்தலில் அனிஷ் கிரி தனது ராணியை தவறாக நகர்த்த, தோல்வி உறுதியானது. வாய்ப்பை பயன்படுத்திய குகேஷ், 42வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர் பெக் மோதிய போட்டி 46 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

Advertisement