திருப்பரங்குன்றம் மலை 'முருகன் மலை' என லண்டன் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது

12


திருப்பரங்குன்றம்: 'திருப்பரங்குன்றம் மலை 'முருகன் மலை' என லண்டன் நீதிமன்றம் பிரிட்டிஷார் காலத்திலேயே தீர்ப்பு வழங்கியுள்ளது' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.


திருப்பரங்குன்றம் மலை மேல் நேற்று ஆடு, கோழி அறுத்து சமபந்தி விருந்து என சில முஸ்லிம் அமைப்புகள் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மலையை பாதுகாப்பது குறித்தும் நேற்று திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர்கள் சேவுகன், முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். கோட்டச் செயலாளர் அரசு பாண்டி வரவேற்றார். பா.ஜ., நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வேல்முருகன், வெற்றிவேல் முருகன் கலந்து கொண்டனர்.


பின் காடேஸ்வரா சுப்ரமணியம் வேல் ஏந்தி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அவர் கூறியதாவது: 30 ஆண்டுகளாக மலை மேல் உள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டுமென ஹிந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை.


தி.மு.க., அ.தி.மு.க., ஹிந்துக்களுக்கு விரோதமாக நடக்கின்றன. திருப்பரங்குன்றம் மலையை காப்பாற்றவும், முருகப்பெருமானை காக்கவும் ஆன்மிக பெரியோர்கள், மடாதிபதிகளின் ஆலோசனை பெற்று மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். திருப்பரங்குன்றம் புனிதமான மலை. மலையை பாதுகாக்க ஹிந்துக்கள் ஒன்று திரள வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் நேற்று முஸ்லிம்களை ஆடு வெட்ட அனுமதித்தால் ஹிந்து முன்னணி சார்பில் தீபத்துாணில் தீபம் ஏற்றுவோம் என அறிவித்திருந்தோம். அவர்களுக்கு அனுமதி கொடுக்காததால் நாங்கள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்தோம்.


திருப்பரங்குன்றம் முருகன் மலையானது ஆறுபடை வீடுகளில் முதல் படையாகும். இதை சிக்கந்தர் மலையாக மாற்ற வேண்டும் என சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. அதற்கு வெளிநாட்டு சதியும் இருக்கிறது என மக்கள் கூறுகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்பது ஒவ்வொரு ஹிந்துக்களின் கடமையாகும் என்றார்.

Advertisement