137 ரன்னில் சுருண்டது வெ.இண்டீஸ் * பாக்., அணி ஆதிக்கம்
முல்தான்: முல்தான் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 137 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.
பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் முல்தானில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 143/4 ரன் எடுத்திருந்தது. ஷகீல் (56), ரிஸ்வான் (51) அவுட்டாகாமல் இருந்தனர்.
சரிந்த 'டாப்'
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 141 ரன் சேர்த்த போது ஷகீல் (84) அவுட்டானார். சல்மான் (2) ஏமாற்ற, ரிஸ்வான் 71 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் கைவிட, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேடன் சீலஸ் 3, வாரிகன் 3, சின்கிளைர் 2 விக்கெட் சாய்த்தனர்.
நோமன் அபாரம்
அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் பிராத்வைட் (11) கைவி, 51 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் வரிசையில் சின்கிளைர் (11), குடகேஷ் (19), சீலஸ் (22) இரட்டை இலக்க ரன் எடுத்து ஆறுதல் தர, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 137 ரன்னுக்கு சுருண்டது. வாரிகன் (31) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 5, சாஜித் 4 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூது (52) கைகொடுத்தார். இரண்டாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 109/3 ரன் எடுத்து, 202 ரன் முன்னிலை பெற்றிருந்தது.