இடிந்து பல ஆண்டாகியும் சீரமைக்கப்படாத இரவார்பட்டி -அச்சங்குளம் வைப்பாறு பாலம்

சாத்துார்: இரவார்பட்டி - அச்சங்குளம் வைப்பாறு பாலம் இடிந்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்காததால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சல்வார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட இரவார்பட்டி - அச்சங்குளம் வைப் பாறு பாலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்களில் வைப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் உடைந்து சேதமடைந்தது. நடுச்சூரங்குடி, புதுச் சூரங்குடி, பந்துவார்பட்டி பகுதி மக்கள் சிவகாசி செல்வதற்கு இந்த பாலம் வழியாக சென்று வந்தனர்.

இதே போன்று சுப்பிரமணியபுரம் சல்வார் பட்டி, இரவார் பட்டி சங்கரநத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் சூரங்குடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இந்த பாலம் வழியாக வந்து சிகிச்சை பெற்று சென்றனர். பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்பவர்களும் இந்த பாலம் வழியாக சென்று வந்தனர். மேலும் அச்சங்குளம் கிராம மக்கள் சல்வார் பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று தங்கள் பணிகளை மேற்கொள்ளவும் வசதியாக இருந்தது.

தற்போது பாலம் உடைந்து போன நிலையில் ஆற்றில் தண்ணீர் செல்வதால் பல கிலோமீட்டர் சுற்றி சல்வார் பட்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் சூரங்குடி பந்துவார் பட்டி பகுதியைச் சேர்ந்த மக்களும் சிவகாசி செல்ல சாத்துார் வந்தும் வெம்பக்கோட்டை சென்றும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

வைப்பாற்றில் உடைந்த பாலத்தை புதியதாக கட்டித் தருவதன் மூலம் இந்த பகுதி மக்கள் பலன் பெறுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடைந்து போன பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement