குடியிருப்புகளுக்குள் மழை நீர் தேக்கம் நோய் பரவும் அபாயம்
விருதுநகர்: விருதுநகர் இனிமை நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் காலி இடத்தில் மழை நீர் தேங்குவது தொடர் கதையாக உள்ளது. தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் சூழல் உண்டாகியுள்ளது.
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட இனிமை நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் வீடுகளுக்கு அருகே உள்ள காலி இடங்களில் மழை நீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இப்படி தேங்கும் மழை நீர் வெயில் காலங்களில் வற்றிவிடும்.
ஆனால் தற்போது தேங்கியுள்ள மழை நீர் பல நாட்களாக வற்றாமல் அப்படியே உள்ளது. இதனால் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. தற்போது குளிர்ந்த சூழல் நிலவுவதாலும், மாலை நேரங்களில் மழை பெய்து வருவதாலும் கொசுக்கள் மூலமாக நோய் பரவும் சூழல் உண்டாகியுள்ளது.
இப்பகுதியில் குப்பைத்தொட்டிகள் எதுவும் அமைக்கப்படாததால் காலிமனைகளில் குப்பை கொட்டுகின்றனர். தேங்கிய நீரில் குப்பை சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.
ரோடுகளில் நடந்து, சைக்கிள், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். எனவே இனிமை நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.