இடிந்து பல மாதமாகியும் கட்டப்படாத அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர்
விருதுநகர்: விருதுநகரில் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பல மாதமாகியும் இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
விருதுநகர் நகராட்சி பகுதியில் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமான நிலையில் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சேதத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தும், இதுவரை கட்டுமானப் பணிகள் துவங்கப்படவில்லை.
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, காரியாப்பட்டிக்கு செல்லும் மெயின் ரோடுகள் பிரியும் இடத்தில் உள்ள பள்ளியின் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் கட்டப்படாததால் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அத்துமீறி பள்ளி வளாகத்திற்குள் சென்று வருகின்றனர்.
இதனால் விஷப்பூச்சிகள், பாம்புகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மாணவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இடிந்து விழுந்த பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டுவதற்கான பணிகளை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.