சின்னர், ஸ்வியாடெக் அபாரம் * ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில்...

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இத்தாலியின் சின்னர், போலந்தின் ஸ்வியாடெக், நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர் இத்தாலியின் சின்னர், 46 வது இடத்திலுள்ள அமெரிக்காவின் மார்கஸ் கிரானை சந்தித்தார். ஒரு மணி நேரம், 59 நிமிடம் மட்டும் நடந்த இப்போட்டியில் சின்னர், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் மிச்செல்சன், 6-3, 7-6, 6-2 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் கச்சானோவை வீழ்த்தினார். பிரான்சின் மான்பில்ஸ், 3-6, 7-5, 7-6, 6-4 என, மற்றொரு அமெரிக்க வீரர் பிரிட்சை சாய்த்தார்.
ஸ்வியாடெக் வெற்றி
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில், உலகின் 'நம்பர்-2', போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டனின் எம்மா ரடுகானுவை ('நம்பர்-61') 6-1, 6-0 என எளிதாக வீழ்த்தினார். கஜகஸ்தானின் ரிபாகினா, 6-3, 6-4 என உக்ரைனின் யஸ்டிரெம்ஸ்காவை சாய்த்தார்.
மற்ற மூன்றாவது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் நவாரோ, மடிசன் கீஸ், ரஷ்யாவின் கசட்கினா, குடெர்மெடோவா, உக்ரைனின் ஸ்விடோலினா, வெற்றி பெற்றனர்.

பாலாஜி ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி (தமிழகம்), போர்ச்சுகலின் போர்கஸ், கேப்ரால் ஜோடியை சந்தித்தது. 'டை பிரேக்கர்' வரை சென்று முதல் செட்டை 6-7 என இழந்த பாலாஜி ஜோடி அடுத்த செட்டை 6-4 என வசப்படுத்தியது. மூன்றாவது செட்டை 3-6 என நழுவவிட்டது. முடிவில் பாலாஜி ஜோடி 6-7, 6-4, 3-6 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது.

பிரனவ் ஏமாற்றம்
ஜூனியர் (ஆண்கள்) பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரெத்தின் பிரனவ் செந்தில்குமார் (திண்டுக்கல்), பின்லாந்தின் அஸ்காரியுடன் மோதினார். 2 மணி நேரம், 5 நிமிட போராட்டத்துக்குப் பின் பிரனவ், 7-5, 4-6, 0-6 என போராடி தோல்வியடைந்தார்.

Advertisement