அமலுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்; 3 பிணைக் கைதிகளின் பெயர் வெளியீடு

4



ஜெருசலேம்: இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று 3 பிணைக் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டதால், 2 மணிநேர தாமதத்திற்குப் பிறகு, காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.


மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர், 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். அப்போது, 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை அவர்கள் கடத்திச் சென்றனர். போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே, அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து வந்தன.


இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 770 பாலஸ்தீனியர்கள் விடுதலையாகின்றனர் என தகவல் வெளியாகி இருந்தன.



இது தொடர்பாக, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறியதாவது: போர் நிறுத்தம் அமலுக்கு வராது. காசா மீதான தாக்குதல் தொடரும். ஹமாஸ் அமைப்புடன் போர்நிறுத்தம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, ஏனெனில் விடுவிக்கப்பட வேண்டிய பிணைக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வழங்கவில்லை. இஸ்ரேல் பிரதமரின் உத்தரவுகளின்படி, ஹமாஸ் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராது. இவ்வாறு அவர் கூறினார்.





பட்டியல் வெளியீடு

இந்நிலையில், விடுவிக்கப் போகும் 3 பிணைக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டு உள்ளனர். நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்த பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.






இந்த நிலையில், 3 பெண் பிணைக் கைதிகளின் பெயர் விபரங்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. பிணைக் கைதிகளின் முதற்கட்ட பெயர் பட்டியலை 2 மணிநேரம் தாமதமாக ஹமாஸ் வெளியிட்டதால், இந்திய நேரப்படி 2.30 மணியளவில் இந்தப் போர் நடைமுறைக்கு வந்துள்ளது.

Advertisement