'அவன் தான்டா பெரிய வேலையா பாத்துட்டான்'; புலி நகத்துடன் பேட்டி கொடுத்தவர் கைது

8

கோவை: புலி நகத்துடன் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவருக்கு பேட்டி கொடுத்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.


@1brகோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் என்பவர், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த செயின் குறித்து அந்த இன்ஸ்டா பிரபலம் கேள்வி எழுப்பினார்.


அதற்கு, பதிலளித்த அவர், 'இதை வெளியில் சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். இது புலி நகம். ஆந்திராவில் விலை கொடுத்து வாங்கினேன். வேட்டைக்கு போக வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது', என்று வெகுளித்தனமாக பேசியுள்ளார். உடனே, அந்த இன்ஸ்டா பிரபலம், 'இனி நீங்க பேமஸ் ஆகப்போறீங்க' எனக் கூறினார்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பாலகிருஷ்ணனின் வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஒரு புள்ளிமானின் கொம்பின் துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதன்பேரில், பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இது குறித்து வனத்துறையினர் முன்பு பாலகிருஷ்ணன் ஆஜரானார். அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த புலி நகம் போட்ட செயினை பறிமுதல் செய்த வனத்துறையினர், சோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Advertisement