மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து!
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா நடக்கும் நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்துக்களின் பெருவிழாவாக கருதப்படும் மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜன.,13ம் தேதி துவங்கியது. பிப்.,26 வரை 45 நாட்கள் நடக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த விழாவின் 7வது நாளான இன்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், கும்பமேளாவின் ஒரு பகுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
உடனே சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள், பக்தர்களை அப்புறப்படுத்தியதுடன், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உணவு சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் அங்குள்ள மேற்கூரை துணியில் (TENT) தீப்பிடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தத் தீ படிப்படியாக பிற மேற்கூரைகளுக்கும் பரவியுள்ளது. இதனால், அப்பகுதி புகை மூட்டமாக காட்சியளித்துள்ளது.
இந்த தீவிபத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தீவிபத்து குறித்து பேசிய ஏ.டி.ஜி., பானு பாஸ்கர்,' மகா கும்பமேளாவின் செக்டார் 19ல் 2 சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது பிற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது. மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது', எனக் கூறினார்.