7 வயது சிறுவனை மது குடிக்க வைத்த ஆட்டோ டிரைவர் கைது!
திருச்சி: திருச்சி அருகே 7 வயது சிறுவனை மதுகுடிக்க வைத்து அதை வீடியோவாக வெளியிட்ட ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புதூர் உத்தமானூரைச் சேர்ந்தவர் அஜித்குமார். ஆட்டோ டிரைவர். பொங்கல் நாளில் மது அருந்திய அவர், சும்மா இருக்காமல் தமது அருகில் இருந்த 7 வயது சிறுவனுக்கு அந்த மது பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அந்த சிறுவனும் அதை வாங்கி குடித்துள்ளான்.
மது கொடுத்து அதை குடிக்க வைத்ததோடு நில்லாமல், செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் அஜித்குமார் வெளியிட்டு உள்ளார். 7 வயது சிறுவன் மது குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதோடு கடும் கண்டனங்களும் எழுந்தன.
வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து சிறுவனை மது குடிக்க வைத்த அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.