விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை: பிப்.,14ல் நடக்கிறது
புதுடில்லி: குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் வரும் பிப்., 14ம் தேதி அன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டில்லியை நோக்கி பேரணியாக கிளம்பினர். ஆனால், பஞ்சாப் ஹரியானா மாநில எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல விவசாய சங்கத்தினர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதில், விவசாய சங்கத் தலைவர் ஜக்கித் சிங் தலேவால், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அங்கு அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தார்.
இந்நிலையில், விவசாய சங்கத் தலைவர்களை மத்திய விவசாயத்துறை கூடுதல் செயலர் பிரியா ரஞ்சன் தலைமையிலான அதிகாரிகளை விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதில், வரும் 14ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்து உள்ளது. இதனை விவசாய சங்க தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து ஜக்கித் சிங் தலேவால், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டு உள்ளார். இருப்பினும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து உள்ளார்.