பயிற்சி டாக்டர் வழக்கில் நாளை தண்டனை அறிவிப்பு; தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் குற்றவாளியின் தாய்!

3


கோல்கட்டா: கோல்கட்டா பயிற்சி டாக்டர் கொலை வழக்கில், 'என் மகன் குற்றவாளி என்றால், அவன் தண்டிக்கப்பட வேண்டும்' என சஞ்சய் ராய் தாய் மாலதி ராய் தெரிவித்தார்.


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்த பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆக., 9ல் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு அறையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும், ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் உட்பட, நாடு முழுதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என, நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விபரம் நாளை வெளியிடப்பட உள்ளது.



இந்நிலையில், 70 வயதான சஞ்சய் ராய் தாய் மாலதி ராய் கூறியதாவது: சட்டத்தின் தீர்ப்பை எதிர்கொள்கிறேன். என் மகன் குற்றவாளி என்றால், அவன் தண்டிக்கப்பட வேண்டும். தனது மகனின் தலைவிதியாக கருதுகிறேன். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். பெண் பயிற்சி டாக்டரின் வலியை புரிந்து கொள்ள முடியும். கடும் தண்டனை கிடைக்கட்டும். சஞ்சய் ராயை தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறினாலும் அதனையும் ஏற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


இது குறித்து சஞ்சய் ராயின் சகோதரி கூறியதாவது: எனது தம்பி செய்தது நினைத்து பார்க்க முடியாத அளவு பயங்கரமானது. இதை சொல்லும் போதே என் இதயம் உடைகிறது. இந்த தவறை அவர் செய்திருந்தால் கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் என்னை போன்று ஒரு பெண் டாக்டர். இவ்வாறு அவர் கூறினார்.


சஞ்சய் ராய் நீதிமன்ற காவலில் இருந்த போது, தாயும், சகோதரியும் நேரில் வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement