மும்பை மாரத்தான்: துவக்கி வைத்த கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
டாடா குழுமத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் மாரத்தான் போட்டி நடைபெறும். அந்த வகையில் இன்று (ஜன.,19) நடைபெற்ற மாரத்தான் போட்டியை மஹாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி முனையத்தில் மாரத்தான் ஓட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஓடினர்.
இது தொடர்பாக பேசிய பாஜ., எம்பி தேஜஸ்வி சூர்யா, ‛‛டாடா மும்பை மராத்தான் உலகின் சிறந்த மராத்தான்களில் ஒன்று. இது வலிமை, நெகிழ்ச்சி, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உணர்வைக் குறிக்கிறது. அனைத்து இளைஞர்களும் குறைந்தபட்சம் ஒரு உடல் உழைப்பையாவது மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இது அதிக ஆற்றலையும், ஒழுக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. ஒவ்வொரு நாளும் வெறும் 30 நிமிட உடல் பயிற்சி செய்தாலே உடலில் ஏற்படும் அதிசயங்களை காணலாம். இந்த மாரத்தானில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்'' என்றார்.
இந்த மாரத்தானில் ஆண்கள் பிரிவில் எரித்திரியாவின் பெர்ஹேன் டெஸ்பே முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் கென்யாவின் ஜாய்ஸ் செப்கெமோய் டெலி முதலிடத்தையும் பெற்றனர்.