தமிழகம் முழுவதும் பரவலாக கொட்டிய மழை!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று திடீரென மிதமான மழை பெய்தது.



திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பொன்னலூர்பேட்டை, பூண்டி, வேப்பம்பட்டு, கடம்பத்தூர் என பல பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதி அடைந்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், தேவனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கியது.


ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரம் மிதமான மழை கொட்டியது. மழை எதிரொலியாக ராமநாதசுவாமி கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. கோவில் ஊழியர்கள் சிறிது நேரம் போராடி மழைநீரை வெளியேற்றினர்.


மழைநீருடன், கழிவு நீரும் பல பகுதிகளில் கலந்து வெளியேறியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கடலில் அலையின் சீற்றம் அதிகம் காணப்பட்டதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.


கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர், உக்கடம், காந்திபுரம், சுந்தராபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவானது. திண்டுக்கல் மாவட்டம் வேலம்பட்டி, கோவில்பட்டி, நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சாரல் மழை பெய்தது.

Advertisement