13 அமாவாசைகளும், 100 பவுர்ணமிகளும்: இ.பி.எஸ்., உடன் செந்தில் பாலாஜி மோதல்!

4

சென்னை: தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசைகள் தான் இருக்கிறது என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, 'இன்னும் 100 பவுர்ணமிகளுக்கு ஸ்டாலின் தான் முதல்வர் என்பதை இ.பி.எஸ்., 2026ல் உணர்ந்து கொள்வார்' என்று தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று முன்தினம் (ஜன.,17) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., '2026-ம் ஆண்டு கண்டிப்பாக அ.தி.மு.க., ஆட்சியை கொண்டு வருவோம். தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் பாக்கி. இந்த ஆட்சியில் 4 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார். தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியது தான் அவர் செய்த சாதனை', என்று கூறினார்.


தி.மு.க.,வின் ஆட்சியையும், அமாவாசையையும் தொடர்புபடுத்தி இ.பி.எஸ்., தொடர்ந்து பேசி வருவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.


அந்தப் பதிவில், ''இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் பழனிசாமி, இன்னும் நூறு பவுர்ணமிகளுக்கு ஸ்டாலின்தான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் உணர்ந்து கொள்வார்,'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement