இதே நாளில் அன்று

ஜனவரி 20, 1945

உத்தரகண்ட் மாநிலம், கிரி பனெல்சியுன் என்ற கிராமத்தில், ராணுவ மேஜர், ஜி.என்.தோவலின் மகனாக, 1945ல் இதே நாளில் பிறந்தவர் அஜித் தோவல்.

இவர், ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள ராணுவ பள்ளி, ஆக்ரா பல்கலைகளில் படித்தார். ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, கேரள மாநிலம், கோட்டயத்தின் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய இவர், 15 விமான கடத்தல்களை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்காற்றினார். 'மல்டி ஏஜன்சி சென்டர்' எனும் ராணுவ பிரிவின் நிறுவன தலைவராக இருந்த இவர், புலனாய்வுக்கான கூட்டு பணிக்குழுவின் தலைவராகவும் இருந்தார்.

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்குள், ஐ.எஸ்.ஐ., எனும் பாக்., ஏஜன்ட் போல, பொற்கோவிலில் ஊடுருவி, ஆயுத குவியல்களை கண்டறிந்து, 'பிளாக் தண்டர்' எனும் அதிரடி நுழைவு நடவடிக்கைக்கு உதவினார். சிக்கிம் இணைப்பு, ஐ.சி., 814 விமான கடத்தல் உள்ளிட்டவற்றின் பேச்சு குழுவில் இடம்பெற்றார். இந்திய உளவுத்துறை இயக்குனரானார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராகி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தாக்குதலுக்கு உதவியது, டோக்லாம் மோதலை தீர்த்தது உள்ளிட்ட செயல்களுக்காக பாராட்டப்பட்டார். வெளியுறவு ஆலோசனை குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

ராணுவத்தின் உயரிய விருதான, 'கீர்த்தி சக்ரா'வை பெற்ற போலீஸ் அதிகாரியின், 80வது பிறந்த தினம் இன்று!

Advertisement