இரட்டை கொலை எதிரொலி; இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
சென்னை: இரட்டை கொலை நடந்த நிலையில், ரவுடிகளை ஒழிப்பதில் அலட்சியமாக செயல்பட்ட, சென்னை, பட்டாபிராம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தங்கள் காவல் நிலைய எல்லை பகுதியில், எத்தனை ரவுடிகளின் வீடு உள்ளது.
அவர்களில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்கள், ஜாமினில் வந்தவர்கள், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் எத்தனை பேர் என்பதை தினமும் கண்காணிக்க வேண்டும். அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ரவுடிகளின் போட்டி குழுக்களையும் கண்காணித்து கைது செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் அலட்சியமாக செயல்பட்டுள்ளார். அதனால், நேற்று முன்தினம், ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டு இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பட்டாபிராம் ஆயில்சேரி, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், 27 ; அவரது தம்பி ஸ்டாலின், 24. இருவரும் ரவுடிகள். இவர்கள் மீது, திருட்டு, அடிதடி என, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இருவரும் வீட்டருகே, நேற்று முன்தினம் மாலை மது போதையில், சாலையில் செல்வோரிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது, ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், ஸ்டாலின் ஆகியோருக்கும், மற்றோரு ரவுடி கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் ஆயுதம் இல்லாததால், சம்பவ இடத்திலிருந்து சென்று விட்டனர்.
இரவு ஆயுதங்களுடன் வந்த ரவுடி கும்பல், ஸ்டாலினை அவரது வீட்டின் அருகிலும், ரெட்டைமலை ஸ்ரீனிவாசனை, பட்டாபிராம் தனலட்சுமி நகர் மாந்தோப்பு பகுதியிலும், விரட்டி சென்று கொடூரமாக கொலை செய்து தப்பிச் சென்றது.
இந்த ரவுடிகள் மீது, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால், இரட்டை கொலையை தடுத்து இருக்கலாம்.
அலட்சியமாக இருந்துள்ளார் எனக்கூறி, அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று உத்தரவிட்டார்.
திருவேற்காடு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ், பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சோழவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமார், திருவேற்காடு காவல் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, கமிஷனர் சங்கர் பிறப்பித்துள்ளார்.
௫ பேர் கைது
கொலையாளிகளான பட்டாபிராமை சேர்ந்த பிரவீன், 19; நவீன்குமார், 20; சத்யா, 20, சோராஞ்சேரியை சேர்ந்த பாலாஜி,25, கார்த்திக், 20 ஆகிய ஐந்து பேரும் நேற்று, திருவள்ளூர் மம்பேடு அருகே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், ஸ்டாலின் ஆகியோர் எங்கள் குடும்பத்தினர் பற்றி தரக்குறைவாக பேசியதால் கொலை செய்தோம் என, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.