விருதுநகர்--காரைக்குடி ரயிலை திருவாரூர் வரை நீட்டிக்க பயணிகள் எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகரில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் ரயிலையும், திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் ரயிலையும் இணைத்து விருதுநகர் --- திருவாரூர் இடையே இயக்க வேண்டும் என டெல்டா, தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகரில் இருந்து வாரத்தில் 6 நாட்கள் காலை 6:20 மணிக்கு புறப்படும் ரயில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், தேவகோட்டை வழியாக 9:25 மணிக்கு காரைக்குடி செல்லும். மறு மார்க்கத்தில் மாலை 6:10 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு இரவு 9:20 மணிக்கு விருதுநகர் செல்லும்.
இதே போல் தினமும் காலை 6:25 மணிக்கு திருவாரூரில் புறப்படும் ரயில் மாங்குடி, திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, கண்டமனூர் வழியாக காலை 9:35 மணிக்கு காரைக்குடி வரும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் காரைக்குடியில் மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு இரவு 9:20 மணிக்கு திருவாரூர் சென்றடைகிறது. இரு ரயில்களையும் தடநீட்டிப்பு செய்து இயக்கினால் டெல்டா, தென் மாவட்ட பயணிகள் பயனடைவர்.
விருதுநகரில் காலை 6:20 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12:30 மணிக்கு திருவாரூர் சென்று, மறு மார்க்கத்தில் அங்கிருந்து மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு காரைக்குடி வந்து பிறகு விருதுநகர் வந்தடையும் வகையில் இயக்க வேண்டும்.
திருவாரூரில் காலை 6:25 மணிக்கு புறப்படும் ரயில் வழக்கம் போல் காலை 9:35 மணிக்கு காரைக்குடி வந்து அங்கிருந்து மதியம் 12:00 மணிக்குள் விருதுநகர் வந்து, மறு மார்க்கத்தில் மதியம் 3:00 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு காரைக்குடி சென்று, பிறகு இரவு 9:20 மணிக்கு திருவாரூர் சென்றடையும் வகையில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து டெல்டா, தென் மாவட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்.