பிராமணர்களை இழிவுபடுத்துவதா? பொன்முடிக்கு ஹிந்து அமைப்பு கண்டனம்
மதுரை: 'ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன் அளித்த பேட்டி:
தி.மு.க., சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் பொன்முடி, பிராமணர்களை இழிவுபடுத்தும்விதமாக பேசியுள்ளார்; அது கண்டிக்கத்தக்கது. நீதிபதிகள், வழக்கறிஞர்களாக வேறு ஜாதியினர் வரக்கூடாது என, எந்த பிராமணரும் சொல்லவில்லை. அவர்கள் படிக்கக் கூடாதென்றும் தடுக்கவில்லை. அம்பேத்கருக்கு குருவாக இருந்தவர் பிராமணர்.
பிராமணர்கள் மற்ற சமூகத்தினரை முன்னேறவிடவில்லை என பொய்யான குற்றச்சாட்டை அமைச்சர் வைத்தது, திட்டமிட்ட பேச்சு.
தி.மு.க.,வுக்கு வரவு செலவு பார்க்க ஆடிட்டராக, தேர்தல் வெற்றி பெற ஆலோசகராக, கட்சி நிகழ்ச்சி முதல் பிறப்பு, இறப்பு வரை அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் பிராமணர்கள் தேவை. ஆனால், மேடையேறினால் பிராமணர்கள் கசக்கிறார்கள்.தேச பக்தியுள்ள பிராமணரை வந்தேறிகள் என்கின்றனர். இதுதான் சமூக நல்லிணக்கமா?
தாழ்த்தப்பட்ட சமூகத்தை தவறாக பேசினால் எப்படி பி.சி.ஆர்., சட்டம் பாய்கிறதோ, அதேபோல, பிராமணர் சமூகத்தை தவறாக பேசினாலும் பாயும் வகையில், புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு சோலைக்கண்ணன் கூறினார்.