பள்ளி காவலாளிக்கு வெட்டு 9ம் வகுப்பு மாணவர் கைது
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பாலகுமார், 28, கோவில்பட்டி ஏ.வி., அரசு உதவி பெறும் பள்ளி காவலாளி. நேற்று முன்தினம், பள்ளி அருகேயுள்ள கடையில் பாலகுமார் அமர்ந்திருந்தார்.
அப்போது, அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர், திடீரென அரிவாளால் தாக்கியதில் அவருக்கு கழுத்து மற்றும் தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பாலகுமார் ஓய்வில் உள்ளார். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சரியாக படிக்காமல் சுற்றி வந்த மாணவனை, காவலாளி பாலகுமார் கண்டித்த ஆத்திரத்தில், மாணவர் அவரை அரிவாளால் வெட்டியது தெரிந்தது. இந்நிலையில், 14 வயது சிறுவனை நேற்று கைது செய்த போலீசார், நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.