அய்யா கோவில் சாலையில் தெருவிளக்குகள் 'அவுட்'

மணலிபுதுநகர்:மணலி மண்டலம், 16வது வார்டு, மணலிபுதுநகரில் பிரசித்திப் பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர்.

தவிர, இக்கோவிலை ஒட்டி வங்கி ஏ.டி.எம்., கடைவீதி, மசூதி உள்ளிட்டவை இருப்பதால், மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும். இந்நிலையில், அய்யா கோவிலில் இருந்து, ஆண்டார்குப்பம் போலீஸ் சோதனை சாவடி சாலை வரை, சாலை இருபுறமும் நுாற்றுக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை ஒளிர்வதில்லை. இதனால், இரவு வேளைகளில் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் வழிப்பறி மற்றும் திருட்டு அச்சத்தில் உள்ளனர்.

வாகன ஓட்டிகள் இருட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள் தெரியாமல், மோதி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள் கவனித்து, தெருவிளக்குகளை முறையாக ஒளிர செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement