காதலன் கொலை வழக்கு; கேரள பெண்ணுக்கு தூக்கு தண்டனை!

37


திருவனந்தபுரம்: கேரளாவில் விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.


கடந்த 2022ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ், 23. திங்கள்சந்தை அருகே நெய்யூரில் தனியார் கல்லுாரியில், 'ரேடியாலஜி' இறுதியாண்டு படித்து வந்தார். கல்லுாரிக்கு பஸ்சில் வந்து சென்ற போது, களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா, 22, என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கு கிரீஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


மேலும், பிப்ரவரியில் ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால் கிரீஷ்மா, தன் காதலன் ஷாரோனுடன் தொடர்பை குறைத்தார். ஆனால், ஷாரோன் தொடர்ந்து அவருடன் பேச முயற்சித்தார். இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் ஷாரோனிடம் இருந்ததால், அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.


வாந்தி எடுத்த அந்த வாலிபர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். பாறசாலை போலீசார் கிரீஷ்மாவை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் கிரீஷ்மாவுடன் சேர்த்து அவரது தாய் சிந்து, மாமா நிர்மலாகுமரன் நாயர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.



இந்த வழக்கு நெய்யாற்றின் கரை கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட கிரீஷ்மா, அவரது தாய் மாமன் நிர்மல்குமார் நாயரை குற்றவாளிகளாக கோர்ட் அறிவித்தது. கிரீஷ்மாவின் தாயார் சிந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விபரத்தை கோர்ட் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மாமன் நிர்மல்குமார் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, கிரீஷ்மா தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. வயது, கல்வியில் படைத்த சாதனைகள் மற்றும் முன்பு எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாததை காரணம் காட்டி, தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், அவரது வாழ்க்கையை மறுசீரமைக்கத் தேவையான வாய்ப்பை கிரீஷ்மாவுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அவை ஏற்கப்படவில்லை.

முன்னதாக, ஷாரோனை காதலிக்கும் போது, இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்களை காட்டி மிரட்டியதால், வேறு வழி தெரியாமல் கரீஷ்மா இந்த செயலை செய்ததாக அவரது தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், பிளாக்மெயில் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement