ஆப்கனில் பெண் கல்வி மறுப்பு; தலிபான் இணையமைச்சர் எதிர்ப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து, தலிபான் அமைப்பினர் அந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது, முந்தைய ஆட்சியைப் போல் இந்த ஆட்சியில் நடக்க மாட்டோம் என்று கூறியிருந்தனர்.
ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் 6ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ பயிற்சி மற்றும் படிப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தலிபான் மூத்த இணை அமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாயும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பெண்களுக்கான கல்விக் கதவை திறக்க ஆட்சியாளர்களை மீண்டும் வலியுறுத்துவோம். 40 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில், 20 மில்லியன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இது அவர்களின் உரிமையை பறிக்கும் செயல். இது இஸ்லாமிய சட்டத்தில் கிடையாது," எனக் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தலிபான் அமைச்சரே குரல் கொடுத்திருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.