எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆளுங்கட்சி ஆனவுடன் எதிர்ப்பா; தி.மு.க.,வுக்கு விஜய் கேள்வி!

30

சென்னை: ''நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா,'' என பரந்தூரில் த.வெ.க., தலைவர் விஜய் பேசினார்.


பரந்தூரில் புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை, த.வெ.க., தலைவர் விஜய் சந்தித்து பேசினார். அப்போது, விஜய் பேசியதாவது: கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலே, உங்க மண்ணுக்காக போராடி கொண்டு இருக்கிறீர்கள். உங்க போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசுவதை கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு மனதை ஏதோ செய்தது. உடனே உங்க எல்லாரும் சந்தித்து பேச வேண்டும் என்று தோணுச்சு.


காலடி மண்



உங்கள் எல்லோரும் கூட தொடர்ந்து நிற்பேன். ஒவ்வொரு வீட்டிற்கு ரொம்ப முக்கியமானவர்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதே மாதிரி நம்ம நாட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள் உங்களை மாதிரி விவசாயிகள் தான். அதனால் உங்கள மாதிரியான விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு தான், என்னுடைய பயணத்தை துவங்க வேண்டும் என்று முடிவோடு இருந்தேன். அதற்கு சரியான இடம் இது தான் என்று எனக்கு தோணுச்சு.

ஓட்டு அரசியலுக்காக அல்ல!



என்னை உங்க வீட்டில் இருக்கும் மகனாக பாருங்கள், என்னுடைய கள அரசியல் பயணம் உங்களுடைய ஆசீர்வாதத்துடன் இங்கிருந்து தான் துவங்குகிறது. நமது முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கையை பற்றி எடுத்து சொன்னேன். அதுல ஒன்று தான், இயற்கை வள பாதுகாப்பு. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கூடிய, இயற்கைக்கு பிரச்னை விளைவிக்காத, பகுதிசார் மாநில வளர்ச்சி பரவலாக்கம் நாம் அறிவித்த கொள்கை. இதை நான் இங்கு சொல்வதற்கு காரணம், ஓட்டு அரசியலுக்காக அல்ல.

சட்டப்போராட்டம்




இன்னொரு தீர்மானம், விவசாயிகள் நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம். அதுல, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து, சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கை விட வேண்டும் என வலியுறுத்தினேன். இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காவும், நமது விவசாயகள் பாதிக்கும் திட்டத்திற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று சொல்லி இருந்தோம்.


இங்க வர கூடாது!



இந்த பிரச்னையில் உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். இன்னொரு முக்கியமான விஷயம், நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுக்கு நான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவர் அல்ல. ஏர்போர்ட்டே வர கூடாது என்று சொல்லவில்லை. இந்த இடத்தில் வர கூடாது என்று தான் சொல்கிறேன். இதை நான் சொல்லவில்லை என்றால், இவன் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதையை கட்டி ஆரம்பித்துவிடுவார்கள். சரி நமக்கு அதை பற்றி எல்லாம் கவலையில்லை.

மக்கள் விரோத அரசு



எல்லாத்துக்கும் மேல, இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் இருப்பையும் புவி வெப்பமயமாதல் பயமுறுத்தி கொண்டு இருக்கிறது. அதனுடைய ரிசல்ட் தான் மழை காலத்தில் சென்னை சிட்டி தத்தளித்து கொண்டு இருப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு வருடமும், சென்னை வெள்ளத்திற்கு காரணம் சதுப்பு நிலங்களை அழிப்பது தான். இப்படி ஒரு சூழல் இருக்கும் போது 90 சதவீத நீர்நிலைகள், விவசாய நிலங்களை அழித்து விமான நிலையத்தை கொண்டு வர வேண்டும். என்ற முடிவை எடுத்தது எந்த அரசாக இருந்தாலும், அது மக்கள் விரோத அரசாக தான் இருக்க முடியும்.

ஏதோ லாபம்!



சமீபத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்கிறேன். அதை நிலைப்பாட்டை தான் பரந்தூர் பிரச்னையிலும் எடுத்து இருக்க வேண்டும். எடுக்கணும். எப்படி அரிட்டாப்பட்டி மக்கள் நம்ம மக்களோ, அதே மாதிரி தான் பரந்தூர் மக்களும் நம்ம மக்கள். அப்படி தான ஒரு அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஏன் அரசாங்கம் அப்படி செய்யவில்லை? இந்த விமான நிலையத்தையும் தாண்டி, இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதனை நமது மக்கள் தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறார்கள்.


நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள்!


*நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும் போது, எட்டு வழி சாலையை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாடை தானே இங்கேயும் எடுக்க வேண்டும்?


* அது எப்படி நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? இது எனக்கு புரியவில்லை.



இனிமேல் சொல்கிறேன். உங்க நாடகத்தை பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடிகள் ஆச்சே, அதையும் மீறி விவசாயிகள் போராட்டம் நடத்தினால் பிரச்னை தான். மக்கள் நாடகத்தை பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

மறு ஆய்வு செய்யுங்க!



விமான நிலையத்திற்கு ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்யுங்கள். விவசாய நிலங்கள் பாதிப்பு இல்லாத இடத்தை பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள், வளர்ச்சி தான் மக்களை முன்னேற்றும். வளர்ச்சி என்ற பெயரில், நடக்கிற அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும். நீங்க எல்லாரும், உங்க ஊர் கொல்லம்மேட்டாள் அம்மன் மீதும், எல்லையம்மன் மீதும் ரொம்ப நம்பிக்கை வைத்து இருப்பது எனக்கு தெரியும்.

பர்மிசன் கிடைக்கவில்லை





அந்த நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். உங்களுக்காகவும், உங்க ஊருக்காகவும், உங்க வீட்டு பிள்ளையாக நானும், தமிழக வெ ற்றிக் கழக தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு, உங்களுடன் நிற்போம். ஏகனாபுரம் ஊருக்குள் வந்து மக்களைச் சந்திக்க நினைத்தேன்
எனக்கு பர்மிசன் கிடைக்கவில்லை; நான் ஊருக்குள் வருவதற்கு ஏன் தடை என்று தெரியவில்லை.

வெற்றி நிச்சயம்



இப்படித்தான், நம்ம புள்ளைங்க ஒரு நோட்டீஸ் கொடுத்ததற்கு தடை விதித்தார்கள்; ஒரு துண்டுச் சீட்டு கொடுத்ததற்கு... ஏன் என்று தெரியவில்லை. மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன். நான் ஏகனாபுரம் வர ஏதற்கு தடை விதித்தார்கள் என்று தெரியவில்லை. நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.

Advertisement