ரஞ்சி: மும்பை அணியில் ரோகித்

மும்பை: ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் விளையாடும் மும்பை அணிக்கு ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் நடந்த 'பார்டர்--கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரை இந்திய அணி 1--3 எனக் கோட்டைவிட்டது. இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும், உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ., கட்டாயமாக்கியது.

வரும் ஜன. 23ல் மும்பையில் நடக்கவுள்ள ரஞ்சி கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மும்பை, ஜம்மு-காஷ்மீர் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இளம் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றனர்.

ரோகித், 10 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி கோப்பையில் விளையாட உள்ளார். இவர், கடைசியாக 2015ல் உ.பி., அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். மும்பை அணிக்கு கேப்டனாக ரகானே தொடர்கிறார்.




மும்பை அணி


ரகானே (கேப்டன்), ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஆயுஷ் மத்ரே, ஸ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லத், ஷிவம் துபே, ஹர்திக் தாமோர், ஆகாஷ் ஆனந்த், தனுஷ் கோட்டியன், ஷாம்ஸ் முலானி, ஹிமான்ஷு சிங், ஷர்துல் தாகூர், மோகித் அவாஸ்தி, சில்வெஸ்டர் டிசோசா, ராய்ஸ்டன் டயஸ், கார்ஷ் கோத்தாரி.




சஞ்சு சாம்சன் இல்லை
கேரளா விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் 30. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இவர், மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் (ஜன. 23-26) விளையாடும் கேரளா அணியில் இடம் பெறவில்லை.

ஐந்தாவது, கடைசி 'டி-20' போட்டி பிப். 2ல் மும்பையில் நடக்க இருப்பதால், பீகார் அணிக்கு எதிரான (ஜன. 30-பிப். 2) ரஞ்சி கோப்பை போட்டியிலும் சாம்சன் விளையாடமாட்டார்.
ஒருவேளை இவர், இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டால் பீகார் அணிக்கு எதிராக களமிறங்கலாம். சமீபத்தில் பயிற்சி முகாமில் பங்கேற்காததால் விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான கேரளா அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை.

கேரளா அணிக்கு சச்சின் பேபி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தவிர இந்த அணியில் பாபா அபராஜித், விஷ்ணு வினோத், பசில் தம்பி இடம் பெற்றுள்ளனர்.

Advertisement