வரலாறு படைத்தது நைஜீரியா: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது

கோலாலம்பூர்: 'டி-20' உலக கோப்பை (19 வயது) லீக் போட்டியில் நைஜீரியா அணி, நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.


மலேசியாவில், பெண்கள் 'டி-20' உலக கோப்பை (19 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, நைஜீரியா அணிகள் மோதின. மழை, ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக தலா 13 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

நைஜீரியா அணிக்கு லில்லியன் உதே (18), கேப்டன் லக்கி பியட்டி (19) ஓரளவு கைகொடுத்தனர். 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 65 ரன் எடுத்தது.

சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு அனிகா டாட் (19), ஈவ் வோலண்ட் (14) ஆறுதல் தந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டன. லில்லியன் உதே பந்துவீசினார். முதல் 5 பந்தில், 4 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் 3வது ரன்னுக்கு ஓடிய டாஷ் வேக்கலின் (18) 'ரன்-அவுட்' ஆனார். இந்த ஓவரில் 6 ரன் மட்டும் கிடைத்தது.
நியூசிலாந்து அணி 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 63 ரன் மட்டும் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. இத்தொடரில் அறிமுகமான முதல் மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, ஐ.சி.சி., முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.

Advertisement