முதல்வர் ஸ்டாலின் இன்று சிவகங்கை வருகை; இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு

சிவகங்கை : காரைக்குடியில் நுாலகம்,திருவள்ளுவர் சிலை இன்று திறப்பு, சிவகங்கையில் நாளை நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டம் வருகிறார்.


முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடு குறித்த கள ஆய்வு செய்து வருகிறார். இன்று சிவகங்கை மாவட்டம் வருகிறார்.


இன்று (ஜன.,21) காலை திருச்சியில் இருந்து காரில் காரைக்குடி வருகிறார். அழகப்பா பல்கலை வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தனது சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டிய வளர் தமிழ் நுாலகத்தை 11:15 மணிக்கு திறந்து வைக்கிறார். மதியம் 12:00 மணிக்கு பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். மதியம் 12:45 மணிக்கு பட்டமளிப்பு விழா அரங்கில் சிறப்புரை ஆற்றுகிறார். அன்று மாலை 5:00 மணிக்கு பி.எல்.பி., மகாலில் தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.


காரைக்குடியில் தங்கும் அவர், நாளை (ஜன.,22) காலை 9:00 மணிக்கு சிவகங்கை வருகிறார். குன்றக்குடி, திருப்புத்துார், அரளிக்கோட்டை, ஒக்கூரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 11:00 மணிக்கு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி வளாகத்தில் அமைத்துள்ள விழா மேடைக்கு வருகிறார். புதிய கட்டடம் திறந்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Advertisement