நகைக்கடன் தள்ளுபடியாகியும் நகை வழங்காத கூட்டுறவு வங்கி கலெக்டர் அலுவலகத்தில் புகார்

தேனி: நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டும் அடகு வைத்த நகையை கோபால் நாயக்கன்பட்டி கூட்டுற வங்கி நிர்வாகம் வழங்கவில்லை என மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெண்கள் புகார் மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 179 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

ஓடைப்பட்டி சுக்காங்கல்பட்டி பசுபதி, ஆண்டாள், அழகுராணி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், கோபால் நாயக்கன்பட்டியில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்தோம்.

நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், வங்கி எங்கள் நகைகளை இதுவரை திருப்பி தரவில்லை.

இப்பிரச்னை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை 5 முறை மனு வழங்கி உள்ளோம். பிரச்னைக்கு தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியகுளம் தாலுகா ஸ்டேட் பேங்க் காலனி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் சையது அபுதாஹீர், நாராயணன் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், எங்கள் பகுதியில் 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

அரசு அனுமதி பெற்ற வீட்டு மனைகளை வாங்கி கீழ வடகரை ஊராட்சியில் வரிகள், கட்டணங்கள் செலுத்தி வருகிறோம்.

இடத்திற்கு பட்டாவும் வழங்கி உள்ளனர். ஆனால், கடந்த 3 மாதமாக எங்கள் பகுதியில் நிலங்களை விற்க, வாங்க பத்திரப்பதிவு செய்ய வில்லை.

பலர் மருத்துவ செலவு, விஷேசம், கல்வி செலவிற்காக வீடு, இடத்தை விற்க முடியாமல் தவிக்கின்றனர். பத்திரப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரினர்.

Advertisement