நிலை மின்கட்டணம் ரத்து செய்ய மறந்தது ஏன் முதல்வரே? உறுதியளித்தும் நிறைவேற்றாததால் வருத்தத்தில் தொழில்முனைவோர்

கோவை; 'நிலை மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக, தமிழக முதல்வரை மூன்று முறை சந்தித்து முறையிட்டோம்; இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது' என, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் கூறினர்.

கோவையில் ஆயிரக்கணக்கான, சிறு குறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. 'ஜாப் ஆர்டர்'கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியை செய்கின்றன. இந்நிறுவனத்தினர் ஒவ்வொருவரும் தொழில் உரிமம் பெற வேண்டும்; பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழில் வரி செலுத்த வேண்டுமென, மாநகராட்சி அழுத்தம் கொடுத்தது.

இதை ஆட்சேபித்த தொழில்துறையினர், மாநகராட்சி துணை கமிஷனர் சுல்தானாவை நேற்று சந்தித்து, மனு கொடுத்தனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ், நிருபர்களிடம் கூறியதாவது:

தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் கேட்டு, மாநகராட்சியில் இருந்து நிர்பந்திப்பதால், தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பெருந்திரள் முறையீட்டுக்கு திட்டமிட்டிருந்தோம்.

தொழில் உரிமம் பெறுவதற்கான வழிகாட்டுதல் வழங்கியதால் கைவிட்டுள்ளோம். பிப்., 14க்குள் உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டது; மண்டலம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்துவதாக கூறியுள்ளனர்.

போராட்டத்தை கைவிட, ஆளுங்கட்சி நிர்ப்பந்திக்கவில்லை; எதிர்க்கட்சிகளின் துாண்டுதலும் இல்லை. மின் கட்டணம் தொடர்பாக, எட்டு கட்ட இயக்கம் நடத்தினோம்; யாருக்கும் நாங்கள் பயப்படவில்லை. எங்களது கோரிக்கையை கூறுகிறோம்.

மின்சார பிரச்னை இன்று வரை தீராமல் இருப்பதால், கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். தொழில்துறையினர் சார்பில், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, மூன்று முறை முறையிட்டிருக்கிறோம்.

நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரினோம்; 'செய்து தருகிறோம்' என கூறினார். இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை மறந்து விட்டது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement