வரத்து குறைவால் தட்டுப்பாடு செவ்வாழை ஒரு பழம் ரூ.25
ஆண்டிபட்டி: வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் வாழைப்பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில்லரை விலையில் செவ்வாழை ஒரு பழம் ரூ.25 விலைக்கு விற்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாழி பூவன், பச்சை, நேந்திரம், கற்பூரவல்லி, பூவன், சக்கை, நாட்டுவாழை சாகுபடி உள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வாழை விளைச்சலில் பாதித்து வரத்து குறைந்துள்ளது.
சில்லறை விலையில் கடைகளில் வாழை பழங்கள் ரூ.5 முதல் ரூ.25 விலையில் தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் வாழைப்பழங்கள் பயன்பாட்டை குறைத்துள்ளனர்.
வியாபாரிகள் கூறியதாவது: கார்த்திகை, மார்கழி சபரிமலை சீசன், கோயில் பூஜைகள், தைப்பொங்கல் அதனை தொடர்ந்து வரும் தைப்பூசம் விழாக்களால் வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது.
ஏஜன்சி மூலம் வெளி மாநிலங்களுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது நாழிப்பூவன் கிலோ ரூ.48, பச்சை 28, நேந்திரம் ரூ.70, கற்பூரவல்லி தார் ரூ.600, பூவன்தார் ரூ.600, சக்கை தார் ரூ.500, நாட்டு வகை தார் ரூ.1000 வரையில் விளைகின்ற இடத்திலேயே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.10 முதல் 15 விற்ற ஒரு செவ்வாழைப்பழம் தற்போது ரூ.25 ஆக உயர்ந்துள்ளது. வியாபாரிகள் ஏஜன்சிகளிடையே ஏற்பட்ட போட்டியால் பழங்கள் விலை தொடர்ந்து உயர்கிறது என்றனர்.