10 ஆண்டு காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய காதலன்

4


பஸ்தி : முஸ்லிம் இளைஞர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்காக, ஹிந்து மதத்துக்கு மாறிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.


உத்தர பிரதேசத்தின் நகர் பஜார் பகுதியைச் சேர்ந்தவர், சதாம் ஹுசைன், 34. இவர், அதே பகுதியில் வசித்து வரும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.


திருமணம் செய்ய அந்த பெண் பலமுறை வலியுறுத்தியும், சதாம் தட்டி கழித்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம், வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சதாம் குடும்பத்தினர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பஸ்தி மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யிடம் சம்பந்தப்பட்ட பெண் சமீபத்தில் புகார் அளித்தார்.


அதில், 'திருமண ஆசைகாட்டி பழகிய சதாம் ஹுசைன், என்னை பலமுறை பலாத்காரம் செய்தார். இதனால், ஏற்பட்ட கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி சதாமும், அவரது குடும்பத்தினரும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குற்றஞ்சாட்டியிருந்தார்.


இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சு நடத்தினர்.

இதன் முடிவில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சதாம், ஹிந்து மதத்துக்கு மாறி, அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தார். அதன்படி, ஹிந்து மதத்துக்கு மாறிய அவர், தன் பெயரை சிவசங்கர் சோனி என மாற்றிக் கொண்டார்.


இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கோவிலில் ஹிந்து முறைப்படி, இருவரும் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர்.


இந்த முடிவை தாங்க ளாகவே எடுத்ததாக கூறிய தம்பதி, வாழ்க்கையில் ஒன்றுசேர உதவிய போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement