காவிரி, வைகை, குண்டலாறு இணைப்புக்கு தடை விதிக்க மறுப்பு
புதுடில்லி : காவிரி, வைகை, குண்டலாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காவிரி, -வைகை-, குண்டலாறு இணைப்பு திட்டத்திற்கு, துவக்கத்திலேயே, கர்நாடக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் அம்மாநில அரசு சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
பொய்யான தகவல்
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தத் திட்டம் தொடர்பான சாதக, பாதகங்கள் குறித்த ஆவணங்களை இரண்டு மாநில அரசுகளும் தங்களுக்குள் வழங்கிக் கொள்வதுடன், அது சம்பந்தமான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமணன், 'இந்தத் திட்டத்தில் கர்நாடக அரசு முன்வைக்கும் எதிர்ப்பு, பொய்யான தகவல்கள் அடங்கியது மட்டுமல்லாமல், முகாந்திரமும் இல்லாதது. இது குறித்த கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று வாதங்களை முன் வைத்தனர்.
கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், 'காவிரி-, வைகை,- குண்டலாறு இணைப்பு திட்ட விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து முதற்கட்ட அனுமதி கூட வழங்கப்படவில்லை.
விசாரணை
'அப்படி இருக்கும் போது, திட்டத்திற்கு எப்படி தடை விதிக்க முடியும்? கர்நாடக அரசின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்.
'மேலும் காவிரி-, வைகை-, குண்டலாறு இணைப்பு திட்டம் தொடர்பான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம் பதிவு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.