போர் நிறுத்த ஒப்பந்தம் பிணைக்கைதிகள் விடுதலை
ரமல்லா, ஜன. 21-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, இரு தரப்பிலிருந்தும் முதற்கட்டமாக 93 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
இதன்படி, ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பிணைக் கைதிகளின் முதல் பட்டியலை ஹமாஸ் தராததால், போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று மணி நேரம் தாமதமாக அமல்படுத்தப்பட்டது.
இதில் முதலாவதாக, ஹமாஸ் தரப்பில் இருந்த பிணைக் கைதிகள் எமில் டமாரி, ரோமி கோனென், டோரன் ஸ்டேய்ன்பிரெச்சர் ஆகிய மூன்று பெண்களை, காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் படையினர் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், தங்கள் சொந்த ஊர் சென்றனர்.
இதையடுத்து, இஸ்ரேல் தரப்பில் இருந்த 90 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். காசா சென்ற அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மொத்தம் 42 நாட்கள் அமலில் இருக்கும் இந்த போர் நிறுத்தத்தின் போது, மேலும் 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், 2,000 பாலஸ்தீன கைதிகளும் அடுத்தடுத்து விடுவிக்கப்பட உள்ளனர்.
அடுத்த இருவாரங்களில், இரண்டாம்கட்ட போர் நிறுத்த பேச்சு நடக்கவுள்ளது. இதன் பின்னரே, போர் நிறுத்தம் தொடருமா அல்லது கைவிடப்படுமா என்பது தெரியவரும்.